யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் 'எழுக தமிழ்' மக்கள் பேரணியை தடுத்தால் ஆபத்தான நிலைமையை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சபையில் எச்சரிக்கைவிடுத்தார்.
தமிழ் மக்களின் சார்பில் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் இரும்புக் கரங்கொண்டு அடக்கப்பட்டமையாலேயே ஆயுதப் போராட்டம் உருவானது. இவ்வாறான வரலாற்றுப் படிப்பினைகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவிருக்கும் 'எழுக தமிழ்' மக்கள் பேரணியை தடுக்க இராணுவத்தினரோ அல்லது புலனாய்வுப் பிரிவினரோ முயற்சிக்கக் கூடாது. இன நல்லிணக்கத்துக்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்றும் கூறினார்.
பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவசக்தி ஆனந்தன் எம்பி இதனைத் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர தமிழ் மக்கள் பெரும் பங்காற்றியிருந்தனர். எனினும், இந்த அரசாங்கம் மஹிந்த அரசாங்கம் பயணித்த பாதையிலேயே பயணிக்கிறது. மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் விவகாரம் என்பவற்றில் இதுவரை எந்தவொரு உறுதியான தீர்வும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கானவர்களின் பங்களிப்புடன் நாளை யாழ்ப்பாணம் முற்றவெளியில் 'எழுக தமிழ்' மக்கள் பேரணி நடைபெறவுள்ளது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் யுவதிகள், புத்திஜீவிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்கின்றனர். இதனை முடக்குவதற்கு அல்லது குழப்புவதற்கு இராணுவத்தினரோ அல்லது புலனாய்வுப் பிரிவினரோ முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு முயற்சித்தால் அது நாட்டை ஆபத்தான நிலைக்கே இட்டுச்செல்லும் என்றும் கூறினார்.
நல்லிணக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டுமாயின் இரு தரப்பு பங்களிப்பு அவசியம். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற முடியாத நிலையில் நல்லிணக்கத்தையோ அல்லது நம்பிக்கையையோ ஏற்படுத்த முடியாது. ஜனநாயக ரீதியில் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் எழுக தமிழ் பேரணியை குழப்பி நாட்டை மீண்டும் குழப்பமான நிலைக்குத் தள்ளவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கியஸ்தர்கள் வடக்கில் ஒன்றையும், தெற்கில் மற்றொன்றையும், சர்வதேசத்துக்கு பிறிதொன்றையும் கூறி ஏமாற்றி வருகின்றனர். உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை. அரசியலமைப்பினூடாக தீர்வொன்றை வழங்குவதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், ஒற்றையாட்சி முறையிலான தீர்வே வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு ஏமாற்றும் வகையில் நடந்துகொள்வதன் ஊடாக நல்லிணக்கத்தையோ அல்லது நம்பிக்கையையோ ஏற்படுத்த முடியாது.
கைதிகள் விவகாரம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரையும் நிபந்தனைகள் இன்றி பொது மன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும். இதனூடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் வடக்கு, கிழக்குத் தவிர்ந்த வெளி மாவட்டங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால் மொழிப்பிரச்சினை காணப்படுகிறது. அது மாத்திரமன்றி இவர்கள் ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டால் மற்றுமொரு வழக்கில் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றனர்.
வீட்டுத் திட்டத்துக்கு என்ன நடந்தது?
வடக்கில் யுத்தத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வீடுகள் இல்லை.
அண்மையில் முல்லைத்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வீடுகள் கட்டித்தரப்படவில்லையென மக்கள் முறையிட்டனர். 65000 வீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்து வீடுகளை வழங்க அரசு முன்வந்தது. எனினும், பொருத்து வீடுகள் மக்களுக்கு பொருத்தமில்லை நிரந்தரமான கல் வீடுகள் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரினோம். இதுவரை இந்த வீட்டுத் திட்டத்துக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது. இதன் மூலம் மக்களை மீள்குடியமர்த்தும் செயற்பாடுகளும் முடங்கியுள்ளன.
புத்தர் சிலைகள்
வடமாகாணத்தில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் புத்த சிலைகளை அமைப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. நாம் ஒரு மதத்துக்கோ அல்லது இனத்துக்கோ எதிரானவர்கள் அல்ல. வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரை வைத்துக் கொண்டு ஆங்காங்கே புத்தர் சிலைகள் அமைக்கப்படுகின்றன.
தென்பகுதி மக்களை வடக்கில் குடியமர்த்தும் செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இன நல்லிணக்கத்துக்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்றும் சிவசக்தி ஆனந்தன் தனது உரையில் தெரிவித்தார்.

Blogger Comment