தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை இந்த அரசு வழங்குகையில் பல்வேறு தடைகள் அரசியல் ரீதியாக ஏற்படுகிறது. எனினும் அரசு ஒரு போதும் தமிழ் மக்களை கைவிடாது என மீள்குடியேற்ற,புனர்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார
அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் வங்கி ஆவணங்களை தொலைத்த வாடிக்கையாளர்கள் 54 பேருக்கு ஆவணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ் மக்கள் சிங்கள மக்களின் அட்டூழியங்களுக்கு உட்படுவார் என்றும் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு அடிமைப்பட்டு வாழும் சந்தர்ப்பம் ஏற்படும், தமிழ் மக்கள் அடிவாங்குவார்கள் என்றும் யோகர் சுவாமிகள் தன்னுடைய காலத்திலேயே கூறியிருந்தார். அவர் சொன்னது போல தமிழ் மக்கள் கொடூரமான போரை சந்தித்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார்கள்.
ஆனாலும் தமிழ் மக்கள் தங்களுடைய மரபு,மொழி,பண்பாடு, கலாசாரம், கலை என்பவற்றை பேணிவாழ்கின்றனர். உண்மையில் இது ஒரு பெருமையான விடயம்.
வட மாகாணம் வேகமாக வளாச்சிப்பெற்று வருகிறது. இன்னும் நான்கு ஐந்து வருடங்களில் இந்த மாவட்டங்கள் முன்னேற்றம் அடையும் அதற்கு எங்களுடைய அரசு முன்வந்திருக்கிறது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் சேர்ந்து தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முன்வந்து செய்கின்றனர் என்பதை நான் கூற விரும்புகின்றேன். அதனை தமிழ் மக்கள் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் வாக்குகளாலே ஜனாதிபதி தெரிவானார். ஆதலால் ஒருபோதும் தமிழ் மக்களை ஜனாதிபதி கைவிடமாட்டார்.
இவ்வாறு நாங்கள் முற்போக்காக எங்களுடைய வேலைகளை செய்யும் போது பல தடைகள் வருகின்றன. அவை அரசியல் ரீதியான தடைகளாகும்.
முப்பது வருடங்களாக யுத்தத்தால் அழிவடைந்த தமிழ் மக்களின் வாழக்கையை கட்டயெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட முன் வந்திருக்கிறது. இதற்காக தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இந்த நிகழ்வில் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் அஸ்வின் டி சில்வா அதன் போது முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Blogger Comment