கணவனின் தொந்தரவை சகிக்கமுடியாது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவரை அநுராதபுரம் குற்றப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.
பொலிஸ் சார்ஜன்டான எஸ்.விஜயசிங்கவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் குழந்தைகளின் உயிரையும், தாயின் உயிரையும் காப்பாற்றியுள்ளனர். 33 வயதுடைய தாயும், ஏழு வயது மற்றும் 10 மாதங்களைக் கொண்ட குழந்தைகளுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் நகர்களுக்கிடையிலான கடுகதி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்வதற்காக தஹியகம பகுதியில் காத்திருந்தபோதே இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தகவல் கிடைத்த பொலிஸ் அதிகாரி விஜயசிங்க சக பொலிஸாருடன் சென்று அவர்களை காப்பாற்றியதுடன், குழந்தைகள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
தனக்கு 10 மற்றும் 16 வயதுடைய மேலும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகத் தாய் பொலிஸாருக்குக் கூறியிருப்பதுடன், மதுபோதைக்கு அடிமையான தனது கணவர் பல வருடங்களாக உழைத்த பணத்தை வீண்விரயம் செய்துவிட்டு, தினமும் தம்மை தொந்தரவுக்கு உட்படுத்துவதாகக் கூறியுள்ளார். தொந்தரவு தாங்கமுடியாது தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்யத் தீர்மானித்ததாக அப்பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் காப்பாற்றப்பட்ட பெண்ணின் கணவனருக்கு அறிவிக்கப்பட்டபோதும் அவர்களைப் பொறுப்பேற்பதற்கு அவர் வருகை தந்திருக்கவில்லை. இந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் தாயார் அவர்களைப் பெறுப்பேற்றனர். மருமகன் மதுவுக்கு அடிமையானதால் தனது மகளும், அவளுடைய குழந்தைகளும் தற்கொலைக்கு முயற்சித்திருப்பதாகக் தாயார் கூறினார்.
தற்கொலை செய்துகொள்வோமா என தாய் கேட்டபோது அதற்கு தாம் ஒப்புக் கொண்டதாக காப்பாற்றப்பட்ட ஏழு வயது குழந்தை பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளது.

Blogger Comment