முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச செவ்வாயக்கிழமை பிற்பகல் மட்டகளப்புக்கு விஜயம் செய்துள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு ஸ்ரீமங்களராம ரஜமஹா விகாரையில் யுத்தத்தின் போது உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபி நிர்மாண பணிகளின் ஆரம்ப நிகழ்விலும், விஷேட ஆசிர்வாத பூஜை நிகழ்விலும் கலந்துகொண்டார்.
இதன் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விஷேட உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.
மட்டக்களப்பு ஸ்ரீமங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது இந்த விகாரையின் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தாங்கிய புதுமதுர கட்டடம், முன்னாள் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டு, அங்கு மஹிந்த வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையின் முன்னாள் விகாராதிபதியினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் பௌத்த மதகுருமார்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டு. மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வுகளில் பொலிஸாரும், விஷேட அதிரடிப் படையினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த ஒகஸ்ட் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது, மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு விஜயம் செய்யவில்லை எனத் தெரிவித்து, அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோவினால் உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தினால் உயிரிழந்த ஸ்ரீலங்காவின் முப்படை வீரர்களுக்கும் ஆசி வேண்டி விஷேட பிராத்தனை இடம்பெற்றது.
Blogger Comment