19ஆவது சார்க் உச்சிமாநாட்டை இலங்கை பகிஷ்கரித்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை!

19ஆவது சார்க் உச்சிமாநாட்டை இலங்கை பகிஷ்கரித்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
சார்க் அமைப்பின் தொழிற்பாடுகள் குறித்து தெரியாதவர்களே இவ்வாறான கருத்தைக் கூறிவருவதாக பாராளுமன்றத்தில் நேற்றையதினம் விசேட அமைச்சரவை அறிவிப்பொன்றை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர் கூறினார்.
சார்க் உச்சிமாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் ஏகமனதாக எடுக்கப்பட வேண்டும். அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையென மூன்று நான்கு நாடுகள் சார்க் அமைப்பின் தற்போதைய தலைமைத்துவமான நேபாளத்துக்கு அறிவித்துள்ளன. இதன் பின்னரே இலங்கை சார்க் மாநாடு குறித்து அறிக்கையை வெளியிட்டிருந்தது.
19ஆவது சார்க் உச்சிமாநாடு நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கை அதில் கலந்துகொள்ளத் தயாராக உள்ளது என்றும் கூறினார்.
உறுப்பு நாடுகள் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லையென அறிவித்துள்ள நிலையில், நடக்காத மாநாட்டை இலங்கை புறக்கணிப்பதாகக் கூறுவது சார்க் பற்றிய அறிவின்மையை வெளிக்காட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமாதானம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு பிராந்திய ஒத்துழைப்பின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். சார்க் தலைவர்கள் கடந்தகால தோல்விகளை மறந்து பிராந்திய ஒற்றுமைக்காக செயற்படுவது அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தொடந்தும் உரையாற்றிய அமைச்சர், சார்க் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராக இலங்கை காணப்படுகிறது. பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு என்ற கொள்கைக்கு ஆதரவு வழங்கிய ஆரம்பநாடாகவும் எமது நாட்டை கூறமுடியும். மூன்று தசாப்தங்களுக்கு அதிகமான காலத்தைக் கொண்டுள்ள சார்க் அமைப்புக்கு மாறி மாறி ஆட்சிக்குவந்த இலங்கை அரசாங்கங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.
சார்க் அமைப்பின் இலக்குகளை புரிந்துகொண்டு இலங்கை இதுவரை மூன்று தடவைகள் அந்த அமைப்புக்குத் தலைமைத்துவம் வழங்கியிருப்பதுடன், மூன்று மாநாடுகளை இலங்கையில் நடத்தியுள்ளது. தெற்காசிய நாட்டிலுள்ள மக்களின் நலன்புரிகளை அதிகரித்தல், பொருளாதார ஒத்துழைப்புக்களை முன்னெடுத்தல், சமூக முன்னேற்றம் மற்றும் கலாசார பங்களிப்பு ஆகிய விடயங்களில் பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை முன்னெடுத்துள்ளது.
செழிப்பு மற்றும் அர்த்தமுள்ள ஒத்துழைப்பு என்பதை நிலைநாட்டுவதற்கு சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பன மிகவும் முக்கியம்வாய்ந்தவை என்பதை மறுக்க முடியாது.
இதனை நிறைவேற்றாவிட்டால் பிராந்திய ஒத்துழைப்பு உச்ச பயனை அடைய முடியாது.
இரு தரப்புப் பிரச்சினைகள் மற்றும் பயங்கரவாதம் என்பன பிராந்திய நாடுகளை ஒன்றிணைக்கவும் முடியும் பிளவுபடுத்தவும் முடியும். பயங்கரவாதம் சிவில் மயப்படுத்தப்பட்ட உலகத்துக்கு அச்சுறுத்தலானது. இது தோற்கடிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இலங்கை தொடர்ந்தும் உறுதியாக உள்ளது.


சகல விதத்திலான பயங்கரவாதமும் தோற்கடிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் சார்க் நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றார். 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment