தாய்லாந்து பிரதமர் பிரேயுத் சான் ஓச்சாவிற்கும் – ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தில் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிலையிலேயே ஸ்ரீலங்கா ஜனாதிபதி இந்த சந்திப்பை நடத்தியிருக்கின்றார்.
தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கில் இன்று முதல் நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ள இரண்டாவது ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்றை தினம் அங்கு சென்ற ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு தாய்லாந்து இராணுவ ஆட்சியினர் புரண அரச மரியாதை வழங்கியுள்ளனர்.
தாய்லாந்து பிரதமர் மாளிகைக்கு சென்ற ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு செங்கம்பல வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், பீரங்கீ வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தாய்லாந்து பிரதமர் பிரேயுத் சான் ஓச்சாவிற்கும் – ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் இரு தரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது தொழில்நுட்பம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, மின்வலு மற்றும் நிரந்தர அபிவிருத்தி உள்ளிட்ட 20 துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா ஜனாதிபதி தாய்லாந்து ஜனாதிபதியுடனும் இரு தரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் 34 நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ள இரண்டாவது ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றவுள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பொருளாதார ஒத்துழைப்புக்கள் மாத்திரமன்றி போதைப் பொருள் தடுப்பிலும் ஆசிய பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Blogger Comment